இன்று காலை! மிதமான பனிமூட்டம்! என் மேனியை வருடிச்சென்ற சில்லென்ற காற்று! அதிகாலை நடைப்பயிற்சிக்காக என்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தேன். இன்று வழக்கம் போல் வரும் நண்பர்கள் இல்லை. அவர்களுக்காக காத்திருப்பதைவிட நாம் நடையை தொடங்கலாம் என்று…தெருவினை கடந்து பிரதான சாலை தொட்டு அங்கிருந்து ஒரு கால் கிமீ சென்ற பிறகுதான் என் கண்ணில் அந்த இளநங்கை தென்பட்டாள். இதற்கு முன் அவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை. வெளிர் ரோஸ் நிற ஆடை அள்ளிச்சொருகிய கொண்டை அதற்கு அழகாக வெளிர் நிறத்திலேயே ஒரு கிளிப். இவ்வளவையும் ரசித்துக்கொண்டிருக்கும் போதே அவள் அருகில் நான் சென்றிருந்தேன். மல்லிகை மனம், மனதை மயக்க.. மெல்ல அவள் பக்கம் திரும்பி புன்னகைத்தேன் அவள் பதிலுக்கு காத்திராமல் மீண்டும் ஒரு முறை.. அவளும் மிகவும் பரிச்சயமானவள் போன்றே பதிலுக்கு புன்னகைக்க..தொடர்ந்தது எங்கள் நடைப்பயிற்சி.

காலை நேர காற்று மெல்ல அவள் மேனியை வருடி சென்ற போது தான் கவனித்தேன் அவளது முகத்தினை! அகண்ட நெற்றி, அதன் மத்தியில் ஓர் நெளிவான ஸ்டிக்கர்போட்டு, அழகான பம்மென்றிருந்த கன்னங்கள்.. அதன் பிரதானமாக இருந்த கன்னத்து குழி.. காற்றினால் கலைந்த கேசம் முன்னே விழ.. நான் என் நடை வேகத்தை சீராக்கி அவளுடைய வேகத்திற்கு ஈடுபோட்டு சென்றுகொண்டிருந்தேன்.

 

எப்போதும் நடக்கும் தொலைவினை  தாண்டிவிட்டிருந்தேன், திரும்பலாமா அல்லது அவளுடன் இன்னும் கொஞ்சம் சேர்ந்து செல்லலாமா என்று என் மனம் குழம்பிக்கொண்டிருந்த வேளையில் அவள் எதேச்சையாக என்னைப்பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்க, அதே நேரத்தில் அவள் பாதையில் இருந்த பள்ளத்தில் கால் வைத்து இடறி விழப்போன அந்த “வெளிர் ரோஸ் வண்ண” ஆடை அணிந்த பெண்ணை தாங்கிபிடிக்கும் போது எனது மணிக்கட்டில் ஏற்பட்டது தான் இந்த சுளுக்கு.

நோட்: நண்பர்கள் பலரும் எனது முந்தைய பேஸ்புக் ஸ்டேடஸ் போஸ்ட் பொய்! என்றனர். அவர்களுக்காக உண்மையை மறைக்காமல் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

தொடர்ச்சி: கண்ணோடு கண் கலந்து! அவள் சுதாரித்துக்கொண்டு “நன்றி” என்றொரு வார்த்தை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

நாளை காலை வரும் வரை காத்திருக்கும் வேளையிலே இங்கே பதிவிடுகிறேன்…

Advertisements