Tags

, , , , ,

என் அனுபவம் தலைப்புக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆம்! நேற்று இரவு “மங்காத்தா” படம் பார்க்க வலுக்கட்டாயமாக நண்பர் ஒருவருடன் செல்ல நேர்ந்தது. நான் என்னதான் “கிளவுட் நயன்” & ரெட்ஜெயன்ட்” தயாரிக்கும் படங்களை பார்க்கக்கூடாது என்ற கொள்கைப்பிடிப்போடு இருந்தாலும்.. விதியின் சதி இருக்கும் பட்சத்தில்.. மதி சொல்லியதை கேட்போமோ? மாலை நேர காட்சிக்கு போகலாம் என்று அழைத்த நண்பனிடம், நான் கமலின் படமே பார்க்கவில்லை.. தல படம் கண்டிப்பாக பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். கடைசியில் போனாலும் போகாவிட்டாலும் இருநூறு ரூபாய் தெண்டம் ஆவது சர்வ நிச்சயம் என்று உணர்ந்து படம் பார்க்க சென்றேன்.

திரைப்படம் விமர்சனம் பண்ணும் அளவிற்கு திரைப்பார்வை எனக்கு கிடையாது. இது என் அனுபவம் மட்டுமே!

கதை ஏதோ ஆங்கிலப்படத்தில் இருந்து சுட்டது என்று பேச்சும், பதிவும் கேள்விப்பட்டது படத்தை பார்த்த உடன் புரிந்தது. சூடு போட்டுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள்.

அஜீத்-தல யின் அறிமுக காட்சி அருமை! அவர் நடந்து வரும் ஸ்டைல், சண்டை, ரொமான்ஸ் பண்ணும் போது, வசனங்கள் பேசும் போது என்று அவரது முத்திரையை பதிக்கிறார். அஜீத், அர்ஜுன் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பது உண்மை. கதை ஒவ்வொரு பாத்திரத்தோடு இணைந்து இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக பல தேவையில்லாத காட்சிகள் ஆனால் அனைத்தையும் ஒரே பாடலில் அமைத்திருப்பது ஜீரணிக்கும் வகையில் இருக்கிறது. இதற்கு மேல் படத்தினை பற்றி நான் பேச விரும்பவில்லை.

“மேல ஏறி வாரோம்” மெட்டினை இன்னும் எத்தனை நாளைக்கு போட்டு நம் காதில் ரத்தம் வர வைப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது புதிதாக சுய புராணம் மற்றும் தம்பட்டம் வகையிலான பாட்டுவேறு. குடும்ப அரசியல் மாதிரி குடும்ப கலை – கொலையினை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய வேண்டும் போல இனி வரும் காலத்தில்….

தல அடிக்கடி நல்லா கெட்ட வார்த்தைகள் (சென்சாரின் அகராதிக்கு) பயன்படுத்தியிருப்பதால் சென்சார் தனது வேலையை காட்டி இருக்கிறது. வார்த்தையில் என்ன இருக்கிறது? என்று புரியவில்லை!அஜீத் தன் தோளின் மேல் திரைக்கதையை தாங்கி.. அந்த பாத்திரம் மூலம் அசத்தலான வில்லனாக, சக கலைஞன் கையால் அறை வாங்கி அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பதன் மூலம் தேர்ந்த நடிகனாக, கலைஞனாக பரிமளிக்கிறார்.

தேவையில்லாத பாடல்கள்… மொக்கை நகைச்சுவைகள்… லாஜிக் இல்லாத கண்டைனர் கடத்தல்.. என்று படம் முழுவதும் ஆங்காங்கே சொதப்பல்கள், கடைசி நேரப்பாடல், கடைசியில் தல தப்பிப்பது, அப்புறம் அர்ஜுன்-தல கூட்டணி திருட்டு – நல்ல மொக்கைப்படம் என்ற சர்டிபிகேட்டுக்கான அத்தாட்சி. (நல்லவேளை என் கைவசம் “அமிர்தாஞ்சன்” இருந்தது நன்றாக போயிற்று. மொக்கை பாடல் காட்சிகள் போது மிக்க நிவாரணியாக இருந்தது).

இவ்ளோ இருந்தாலும்.. தலயின் தயவில் படம் ஓடும், என்னைப்போலவே பல பேர் ஓணானை பிடிப்பார்கள்…  கூடவே ஊரை அடித்து உலையில் போட்ட கேடி சகோதரர்கள் தயவில் கூடிய விரைவில் விழா கொண்டாடிவிடும். கல்லாவும் ரொம்பிவிடும்.. பின்னே ஆகாதா எவ்வளோ விளம்பரம் டிவியில்?

இவர்கள் மாலைபோட்டுக்கொண்டு நம் மேல் மஞ்சத்தண்ணி ஊற்றுகிறார்கள்.. திமிறினாலும், இல்லாவிட்டாலும் “பலிஆகப்போவது” சர்வ நிச்சயம். சுதாரிப்பாக இருக்கும் நானே தெரிஞ்சு ஓணானை வேட்டியில் உட்டுக்கொள்ளும் போது. மற்றவர்கள் எம்மாத்திரம்.?

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வேன், சும்மா இருக்கும் சங்கை ஊதுவேன், ஓணானை பிடிப்பேன் என்று சொல்வபர்கள் கவனத்திற்கு:

  1. இந்த படம் மசாலா மற்றும் மொக்கை வகையினை சேர்ந்தது என்பது என் கருத்து.
  2. கைவசம் தலை வலி நிவாரணியை கொண்டு செல்வது உசிதம்.
  3. உங்களை படாதபாடு படுத்தும் நண்பி/நண்பர்/பாஸ்/ஒருவரை இந்த படத்திற்கு அழைத்துசெல்வது மூலம் உங்கள் வெறியினை தீர்த்துக்கொள்ள முடியும். (ஓரளவிற்காவது)
Advertisements