Tags

, , , , , ,

முதலில் நன்றி ட்விட்டர் நண்பர் திரு. ஸ்கேன் மேன் மற்றும் குழும நண்பர்களுக்கு. நான் இந்த பதிவினை எழுதுவது எனது மனப்பாரத்தினை குறைத்துக்கொள்ளவே!

கடந்த 27ஆம் தேதி  தான் என் சகோதரிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும்  நலம் என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென்று ஓர் அதிர்ச்சி செய்தி. குழந்தையின் நுரையீரல் செயலாற்றும் வேகத்தின் அளவு குறைந்திருக்கிறது  என்று.

மனம் மிகுந்த பாரத்துடன் இருப்பது போன்ற உணர்வு. வாய் விட்டு அழவும் முடியாமல், வந்த கண்ணீரை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க நெற்றியில் அமிர்தாஞ்சன் ரோல்ஆன் தடவி கண்ணில் வந்த காண்ணீருக்கான செயற்கை அர்த்தம் தந்து விட்டு எனது மீட்டிங்கினை தொடர்ந்தேன்.

எனது வாழ்வில் என் சகோதரிகள் பங்கு அளப்பரியது. அவளுக்கு ஒரு வேதனை என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது,. ஆனால் அவளுக்கு தான் எத்தனைஅடுக்கடுக்கான சோதனைகள்.. இறைவா..

பிறந்த குழைந்தைக்கு ஏற்பட்டிருந்ததன் மருத்துவ பெயர் “Persistence Pulmonary Hypertension of the Newborn”எனது தந்தை மூலம் நான் அறிந்தேன்.அது பற்றிய விபரம் இணையத்தில் எனக்கு புரியும் வகையில் கிடைக்காமல், ஒன்றும் புரியாமல் மனம் ஒருங்கே செயல்பட மறுக்க, நெட்டில், பிறந்த  குழந்தையின் நுரையீரல் பற்றிய விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன்.

என்னதான் படித்திருந்தாலும், விபரம் தெரிந்திருந்தாலும் துன்பம் அல்லது எதிர்பாராத ஒன்று நிகழும் போது நமது செயல்பாடுகள் நம்மை மிகுந்த குழப்பத்திற்குள் ஆழ்த்தும்.

இணையத்தில் தேடிப்பார்த்த விபரங்கள் “அபாயம்” இல்லை என்று நம்பிக்கை கூறினாலும் என்னால் முழுமையான ஒரு நிலைப்பாட்டிற்கு வர முடியவில்லை. குழப்பத்தில் இருக்கும்போது நினைவிற்கு வந்தார்” ஸ்கேன்மேன்”.

அக்கப்போருக்கு மட்டுமா இணையமும் த்விட்டரும்? இதற்கு ஏதாவது விடை கிடைக்குமா என கேட்டவுடன் உடனடியாக பதில் தந்து உதவினார் ஸ்கேன்மேன். அவரது உடனுக்குடனான த்வீட்டுகள் மற்றும் அவர் பரிந்துரைத்த நபர்கள் திரு. ராஜ் மோகன் மற்றும் திரு. ஜாவீத்இப்ராஹீம்  ஆகியோர்  உடனுக்குடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ள எனக்கு குழந்தையின் அபாயநிலை புரிய ஆரம்பித்தது.

திருவாரூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் மருத்துவர் திரு. வெங்கடேஷ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் நிலையினை மேம்படுத்த செய்யவேண்டியது குறித்து நானும் எனது தந்தையும் விவாதித்தோம். அவரும் அவர்களால் முடிந்த வரையில் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் 25 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

தக்க நேரத்தில் தகவல் தந்து எனக்கு ஓரளவிற்கு ஒரு புரிதலை ஸ்கேன்மேன் ஏற்படுத்தியிருந்ததால் எனக்கு நானே ஆறுதல்படுத்திக்கொள்ள முடிந்தது.

இந்த வகை சுவாசப்பிரச்சினை ஆயிரம் குழைந்தகளில் ஒருவருக்கு வருவதுண்டு எனவும் சுவாசப்பையின் இயக்கத்தை சீர்படுத்த பிராண வாயுவுடன் “நைட்ரஸ்ஆக்சைட்” செலுத்த வேண்டும் எனவும் அந்த வசதி சென்னை, பெங்களுர் மற்றும் திருவனத்தபுரத்தில் மட்டுமே இருப்பதாக கூறினர். பிறந்த குழந்தையை அவ்வளவு தொலைவு எடுத்து செல்ல “வெண்டிலேட்டர்” கொண்ட ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பிழைக்க வைக்கக்கூடிய விழுக்காடு குறைந்துகொண்டே வருவதாகவும் கூறினர்.

எனது தந்தையும் நானும் கலந்து பேசி குழந்தைக்கு நம்மாலான முயற்சி மற்றும் மருத்துவருக்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி தர ஆரம்பித்தோம்.

எங்கள் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் மதியம் மணி சுமார் 03:20 அளவில் குழந்தையின் சுவாசம் அனைத்தும் நின்று “லோகமாயா” போன்று எங்கள் நெஞ்சில் உதைத்து சென்று விட்டாள்!

ஆம் என்னை பொருத்தவரை அவள் ஒரு “லோக மாயா” தான் எப்படி  கம்சன் நெஞ்சில் உதைத்து மாயையை விளக்கி சென்றாளோ அதே போல் ஏதோ ஒரு மாயையை விளக்கவே அவள் எனது சகோதரியின் வயிற்றில் வந்துதித்து அநேகம் பிரபந்தம், சகல ஸ்தோத்திரம் அனைத்தையும் கேட்டு, பிறந்த பின் நன்கு தாய்ப்பால் அருந்தி, அனைவர் முகம் பார்த்து சிரித்து அழுது பின் எங்களையும் அழவிட்டு சென்றிருக்கிறாள் போல….

குறிப்பு:

கர்ப்பம் தரித்ததுடன் மற்றும் அவ்வப்போது செய்யும் ஸ்கேன் களின் விபரம் முழுமையாக தெரிந்து கொள்வது நன்று. பெரும்பாலான மருத்துவர்கள் இதன் மேல் அதிகம் விவாதிப்பதில்லை.

எனது முதல் சந்தேகமே பெங்களூரில் ஸ்கேன் செய்து முதற்கட்ட ஆலோசனை தந்த மருத்துவரின் அஜாக்கிரதையாக இருக்கோமோ என்று! என்னிடம் ஸ்கேன் சிடி உள்ளது நேரம் இருந்தால் ஸ்கேன்மேன் (திரு. விஜய்) அவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்யலாம் என்றிருக்கிறேன்.

Persistent Pulmonary Hypertension of the Newborn (PPHN) – வீடியோ

மேலும் மேலே தந்துள்ள வீடியோ PPHN பற்றி முழுமையாக விளக்கும் என்று நம்புகிறேன்.

குழந்தை சீம்பால் அருந்திய பின் டையாப்பரில் குழந்தையின் மலம் இருந்ததாகவும், பிறக்கும்போது குழந்தை மலம் வெளியேற்றியதாகவும் தெரிகிறது. சம்பத்தப்பட்ட மருத்துவர் இது பற்றி ஏதும் கூறாத நிலையில், நான் சக நண்பர்களின் துணை கொண்டு இது பற்றிய மேலதிக விபரங்கள் சேகரித்து இந்த நிகழ்வின் சரியான காரணம் அறிய உள்ளேன். என் மாயாவிற்கு ஆனது போல் வேறெந்த குழந்தைக்கும் இந்நிலை நேரக்கூடாது.

Advertisements