குடும்பஸ்தன் ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதால், குடும்பஸ்தன் ஆக தேவையானதை ஒவ்வொன்றாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறேன். ஒரு வழியாக பொறுப்பாக கேஸ் இணைப்பு பெற்று விட்டேன் இன்று.

பாஸ்போர்ட் அல்லது அரசின் ஆவணங்கள் கூட எளிதில் பெற்று விடலாம் போல! இணைப்பு பெறுவதற்கான படிவங்களை தந்து விட்டு சில நாள் கழித்து ஏஜென்சியை தொடர்பு கொண்ட போதுதான் கூறினார்கள் ரேஷன் கார்ட் அவசியம் என்று! நான் இருக்கும் நகரத்தில் எனக்கான தனியானதொரு ரேஷன் கார்ட் அட்டை பெறாத நிலையிலும், எனது பெயரினை எனது தந்தை பெயருடன் இணைந்து இருக்கும் கார்டில் இருந்து நீக்க விருப்பம் இல்லாத காரணத்தினாலும். வேறேதாவது செய்ய இயலுமா என்று இந்த காரணத்தினை கூறி கேட்டேன், பின் அவர்கள் நோட்டரி பப்ளிக் சான்றளித்த டிக்ளேறேஷன் படிவம் பெற்று வரும் படி கூறினார்கள்.

பின் நமது வழக்குரைஞர் திரு. பார்த்திபன் அவர்களை தொடர்பு கொண்டு மேற்படி செய்ய விபரம் கேட்க அவரும் ஒரு நோட்டரி பப்ளிக் விபரம் தந்து தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். இருபது ரூபாய் பத்திரம் வாங்கி, அதில் விபரம் பிரிண்ட் செய்து பின் நோட்டரி பப்ளிகிடம் கையெழுத்து பெற்று, அவருக்கும் “சன்மானம்” தந்து ஏஜென்சியில் சமர்ப்பித்து இணைப்பு வாங்கியாயிற்று.

நான் படிவத்தில் கூறியிருக்கும் விபரம் சரியா தவறா என்று செக் கூட செய்யாமல் கருமமே கண்ணாக எனக்கு படிவத்தில் கையெழுத்திட்டு தந்த அந்த நோட்டரி பப்ளிக் போல் ஒவ்வொருவரும் தங்களது கருமமே கண்ணாக இருந்தால் நமது ஊரிலும் எந்த ஒரு தீவிரவாதியும் எளிதாக ஊடுருவி தகுந்த ஆவணத்துடன் நமது “பிருஷ்டத்தின் கீழே குண்டு வைக்கலாம்! நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டிய தருணம் இது, சமூக பொறுப்புணர்ச்சி மிகவும் முக்கியம் என்னதான் சிறிய படிவம் செக் செய்யும் வேலை மூலம் உங்களது பெரிய வருமானம் பாதிக்கும் என்பதாக இருந்தால் கூட ஓரிரு கிராஸ் கேள்வி கூட கேட்காமல் கையெழுத்திடுவது ஆபத்து.

படிவம் சரிபார்த்து கையோடு பணம் பெற்ற பின் நமக்கான பிரஷர் ரெகுலேட்டர் தருகிறார்கள், இதனை பத்திரமாக வைத்திருத்தல் அவசியம் பின்னாளில் மாறுதலுக்கோ அல்லது சரண்டர் செய்யும் பட்சத்தில் ரேகுலேட்டரில் இருக்கும் நம்பர் சரி பார்த்தபின்னே தான் எல்லாமும். இரண்டு பர்னர் வெண்கலத்திலான ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அடுப்பு, ஒரு லைட்டர், டுயுப் நமது கையில் கொடுத்து விடுகிறார்கள். அடுப்பு உங்கள் விருப்பம் மற்றும் தேர்வு. இன்னும் ஓரிரு நாளில் சிலிண்டர் வீடு தேடி வரும்.

புது இணைப்பு பெறுபவர்களுக்கு பின் வரும் விபரம் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் கேஸ் எஜென்சியினை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். நான் தேசிகன் கேஸ் ஏஜென்சியில் எடுத்துள்ளேன். அனுப்பர்பாளையம் திருப்பூர் பகுதி. விரைவாகவும் பொறுப்பாகவும் நடக்கிறார்கள். அதனை நிர்வாகிக்கும் பெண்மணி சுமார் நாப்பது வயதிருக்கும், பக்கவாதம் வந்ததால் கொஞ்சம் திக்கி பேசுகிறார், அவரது மன உறுதியையும் செயல்திறனையும் மனம் திறந்து பாராட்டி விட்டு வந்தேன்.

தேவையான ஆவணங்கள்:
அடையாள அட்டை – டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் படிவம்,
விலாசம் ஆவணம்: ரேஷன் கார்ட் (அல்லது) வீட்டு வாடகை ரசீது, (அல்லது) வரி செலுத்திய பில். எந்த விலாசத்திற்கு கேஸ் இணைப்பு வேண்டுமோ.
புகைப்படம்: நான்கு பாஸ்போர்ட் படங்கள்.
ஆகும் செலவு: மொத்தமாக ஐயாயிரத்து நூற்றி இருபது. ஒரு சிலிண்டர் இணைப்பிற்கு, வருடத்திற்கு ஒன்பது சிலிண்டர்கள். கூடுதல் சிலிண்டர் தேவை எனில் அது சலுகை விலை இல்லாத விலையில் பெறலாம். இணைப்பின் கூடவே அடுப்பும் வாங்க வேண்டும். கட்டாயம் இல்லை என்றாலும் கட்டாயமாக வாங்கும் வண்ணம் பேசுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தரும் அடுப்பு லேட்டஸ்ட் டிசைன் ஆக இருக்க வாய்ப்பு இல்லை. விலை லேட்டஸ்ட் அடுப்பின் விலையுடன் கம்பேர் செய்தால் குறைந்தது முப்பது முதல் நாப்பது சதம் அதிகமாகத்தான் தெரிகிறது. என்ன செய்ய இணைப்பு அவசியம் மேலும் மாதா மாதம் அவர்களிடம் தான் இணைப்பு சிலிண்டர் பெறவேண்டும் ஆகையால் பேஸ்புக் புரட்சி ஆகாது இங்கே!

மேற்சொன்ன விபரங்களோடு போனால் நிச்சயம் இணைப்பு கிடைக்கும். இந்த மாதம் புதிதாக இணைப்பு பெறுவது மிகவும் சுலபம் என்றே தெரிகிறது. சீக்கிரம்…

விலைவாசி விற்கும் விலையில் பதினேழு ரூபாயில் தினமும் காப்பி குடிப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆக அரை லிட்டர் பால் வாங்கி காய்ச்சி விரும்பிய அளவு கப்பில் ஊற்றி ரசித்து குடிக்க கண்டிப்பாக இந்த செலவு அவசியமே!அரை லிட்டர் பால் வாங்க காலையில்ஐந்தரை மணிக்கு எழுதல் தொடங்கி ஒரு சீரான தின ஓட்டத்திற்கு தயாராகவும்…

குடும்பஸ்தன் ஆகுபவர்கள் மட்டுமே இணைப்பு பெற வேண்டிய அவசியம் இல்லை, விலைவாசி நிலவரத்தில் பொறுப்பான இளைஞர்கள்  அனைவருக்கும் இது அறிவுரையே!

இந்த பதிவில் தொடங்கி இனிமேல் குடும்பஸ்தனாக நான் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பதிவிடப்படும். படிப்பவர்கள் அவர்களது சுய”ரிஸ்க்”கில் படித்துக்கொள்ளட்டும்!

Advertisements