SIDS – Sudden Infant Death Syndrom, அதிகம் அறியப்படாத பிறந்த குழந்தைகளுக்கான ஒரு நோய்க்குறி. பெரும்பாலும் இது மேலை நாடுகளில் அதிகம் அறியப்பட்டாலும், நம் நாட்டில் அதிகம் அறியப்படாமலும், ஆய்வு செய்யப்படாமலும் உள்ளது.

என்னவோ தெரியவில்லை, பிறந்த குழந்தைகள் இறப்பதற்கான நோய்க்குறியீடு பற்றிய இரண்டாவது பதிவு இது. (பாவங்கள் அதிகம் செய்ததன் பலன்  என்றே அறிகிறேன்.)

எனது முதல் பதிவு – எனது சகோதரியின் மகள் இறந்தது பற்றி: <படிக்க இங்கே>

பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி காலை எனது மகனை எனது மனைவி பெற்றெடுத்தாள். இரட்டை ஆண் குழந்தைகள். குறைப்பிரவசம் ஆகையால், பிறந்தஉடன் அவர்களை NICU (Neonatal Intensive Care Unit) வில் வைத்தனர்.

<Picture- Twin 1 >IMG_20160229_173818பிறகு மருத்துவர்களது சீரிய கண்காணிப்பாலும், மனைவியின் சிரமம் பாராத கவனிப்பாலும் குழந்தைகள் எடைகூடி தாயின் நேரடி கவனிப்பில் வந்தனர்.

சரியாக ஐம்பது நாட்கள் கடந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை இரட்டையர்களில் ஒரு குழந்தை தூங்கும்போதே இறந்துவிட்டதாகவும், மருத்துவரால் சரியான காரணம் கண்டறியப்படமுடியவில்லை எனவும் அறிந்தேன்.

மனம் குழம்பிய நிலையிலும், என்ன செய்வதென்பது அறியாமலும், மருத்துவரை தொலைபேசியில் அணுகியபோது, SIDS பற்றி அறிய நேர்ந்தது.

பிறந்த சில நாட்கள் / மாதங்கள் ஆன குழந்தைகள் தூக்கத்திலேயே இறப்பது – SIDS எனப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 7000 குழந்தைகள் அமெரிக்காவில் Sudden Infant Death Syndrome (SIDS), காரணமாக இறக்கின்றனர். இந்த புள்ளிவிபரமானது மற்ற நோய்குறிகளால் இறக்கும் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம்.இந்தியாவில் இது பற்றிய அதிகம் விபரம் இல்லை, ஆனால் பெரியவர்கள் இதனை நன்கு அறிந்திருக்கின்றனர். எனது பாட்டியிடம் இது பற்றி பேசியபோது அவர்கள் நிறைய தகவல்கள் தந்தார். ஆனால் நவீன மருத்துவ கண்காணிப்பு பாட்டி வைத்தியத்தையும் அனுபவங்களையும் முற்றும் மறுதலிக்கிறது. எனது பாட்டி தோராயமாக இருபது குழந்தைகளை வளர்த்தவள், அவளுக்கு இந்நிகழ்வு ஒரு பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக கூறுகிறார்கள்.

இது போன்ற நிகழ்வுகள் நமது குடும்ப வாழ்வில் ஒரு சூறாவளியையே ஏற்படுத்திவிடும் என்பது மறுப்பதற்கில்லை. கணவன் – மனைவி புரிதல்கள், குழந்தையின் மீதான அக்கறை யாருக்கு அதிகம்? எந்த குடும்பத்தார்க்கு அதிகம் என்பது போன்ற பல சிக்கல்கள் கொண்ட விவாதங்கள், தனி நபர் அகங்காரம் மற்றும் தனிப்பட்ட காழ்ப்பு, கொந்தளிக்கும் மன உணர்ச்சிகள், ஆகியவை ஒட்டுமொத்த குடும்பத்தையே சிதைக்கக்கூடியவை. நான் தற்போது அதனை அனுபவித்து வருகின்றேன், சினிமாஅல்லது நாடக பாணியில் குடும்பம் நடத்த தெரியாதவன் நான், ஆனால் எதிர்பார்ப்புகள் எல்லாபக்கங்களிலும் இருக்கிறது. நமது நாட்டில் இது போன்ற குழந்தை மரணங்கள் குடும்பம் பிரிவதற்கு காரணமாகவே அமைகிறது, இந்த நோய்க்குறி சம்பந்தமாக ஆய்வு செய்தபோது அதிகம் பேசப்பட்ட விஷயம், பெற்றோர்கள் மனநிலைமையும், அவர்கள் பிரிவுக்குள்ளாகின்ற நிலையுமே ஆகும்.

SIDS

இன்றளவும் புரிந்துக்கொள்ளப்படாத அறிய இயலாத ஒரு நோய்க்குறியீடாக இருக்கிறது.  95% SIDS மரணம் 2 மற்றும் 4 மாத குழந்தைகளுக்கு அதிகம் சம்பவிக்கிறது. இந்தியாவில் இது பற்றிய புள்ளிவிபரங்கள் இல்லை என்றே கூறலாம்.

SIDS குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நார்மலாக இருப்பார்கள். இந்த உடனடி தூங்கும் போது   ஏற்படும் மரணத்திற்கு முன் எவ்வித அறிகுறிகள் இருக்காது.

எதனால் இது ஏற்படுகிறது?

 1. சாதாரணமாக இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் வியாதி தோற்று ஏற்பட்டு இருக்கலாம்.
 2. பிறப்பின்போதே இருக்கும் குறைபாடுகள்
 3. உடல் உறுப்புகள்  வளர்ச்சி குறைபாடு. உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றம்.
 4. குழந்தையினை தூங்க வைக்கும் முறை – குப்புறப்படுக்க வைத்தல்.
 5. அதிகப்படியான காற்று / இறுக்கமான அல்லது புழுக்கமான சூழல்.

இதை எப்படி தவிர்ப்பது?

 1. குழந்தையை தூங்க வைக்கும் போது – குழந்தையின் முதுகு கீழே இருக்கும் வண்ணம் தூங்க வைக்கவேண்டும், அதாவது மல்லாக்க படுக்க வைக்க வேண்டும், குழந்தையை குப்புறப்படுக்க வைக்கக்கூடாது, பக்கவாட்டாகவும் படுக்கவைக்கக்கூடாது.
 2. குழந்தை குப்புறப்படுக்கும்போது – சப்தம் மற்றும் தாயின் குரலுக்கு அவர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸ் குறைவாகவே இருக்கும். திடிரென்று இரத்தஅழுத்தம், இதயத்துடிப்பு குறைவதற்கு வாய்ப்பு அதிகம். குழந்தைகள் இவ்விதம் படுக்கவைக்கப்ப்படும்போது குறைவான அசைவு, நீண்ட நேர தூக்கம் பெறுவர்,  இவைகள் SIDS மரணம் ஏற்பட வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
 3. குழந்தையை சுற்றி, மூச்சு திணற வைக்கும் எவ்வித பொருட்களும் / செயல்களும் செய்யக்கூடாது. குறிப்பாக புகை, தூசு.
 4. குழந்தையை படுக்க வைக்கும் விரிப்புகள் ஸ்திரமான சமதளத்துடன் இருக்கும் வண்ணம் வேண்டும். baby-anatomy-sids2
 5.   அதிகப்படியான துணி மற்றும் ஆடைகள், உடல் வெப்பம் அதிகமாவது, அறையின் வெப்பம் அதிகமாக இருப்பது போன்றவற்றால் ஏற்படக்கூடும். காற்றோட்டமான சூழல் வேண்டும்.
 6. குழந்தைக்கு உடல் புழுக்கம், வியர்வை,  முற்றிலும் காய்ந்த தலைமுடி, ஓய்வற்ற நிலை, சிலநேரங்களில் ஜுரம் மற்றும் காய்ச்சல்.
 7. தாய்ப்பால் தருவது நன்று. தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை நன்றாக காற்று சேர்ந்து குடிக்காமல், பால் மட்டும் குடிப்பதனால் காற்று புரையேறுவது தவிர்க்கப்படும்.
 8. மிகவும் குளிர் மாதங்கள் – SIDS ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 9. இளம் வயது தாய் பெற்றெடுக்கும் குழந்தைக்கு – SIDS ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 10. இரட்டை மற்றும் மூன்று குழந்தைகள் – SIDS ஏற்பட வாய்ப்பு அதிகம்.

dos-donts

மருத்துவர்களும் ஆய்வாளர்களும் SIDS பற்றிய பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

 1. இரட்டை குழந்தைகள் SIDS பாதிப்பிற்குள்ளாகும் போது உயிருடன் இருக்கும் ஒரு குழந்தை மீது மிகுந்த கவனம் செலுத்துவது இன்றியமையாது.
 2. SIDA மரணம் ஒற்றை குழந்தைகளுக்கு – ஆயிரத்தில் ஒரு குழந்தை எனவும் (1 in 1000). இரட்டை குழந்தைகளுக்கு – ஆயிரத்தில் ஒன்பது குழந்தை (9 in 1000) எனவும் புள்ளி விபரங்கள் கூறுகிறது. சில ஆய்வறிக்கைகள் ஆயிரத்தில் நான்கு என்றும் தெரிவிக்கின்றன.
 3. குறை மாத பிரசவ குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் SIDS பாதிப்பிற்கு  அதிகம் உள்ளாக வாய்ப்பு உள்ளது.
 4. சில அறிக்கைகள்,  இரண்டாவதாக பிறந்த இரட்டை குழந்தைகள் SIDS பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கின்றன.  ஐரோப்பிய ஆய்வறிக்கைகள் இந்த கருத்தினை மறுத்து, முதலில் பிறந்த குழந்தைக்கு இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு போன்றே இருக்கும் என்று கூறுகின்றனர்.
 5. Dr. Philip Spiers அவரது ஆய்வறிக்கையில், 9 in 17 இரட்டை குழந்தைகள் – இரண்டாவது குழந்தையும் SIDS பாதிப்பிற்குள்ளாகும்  அதுவும் முதல் குழந்தை இறந்த அதே நாளில் என்று தெறிவிக்கிறார். மீதமிருந்த 6 குழந்தைகள் ஒரு மாதத்திற்குள் இறந்தன என்று கூறுகிறார். ஆகவே பெற்றோர்கள் மீதமிருக்கும் குழந்தைமீது மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

currentsidsresearch

SIDS பற்றிய அதிகப்படியான கருத்துக்கள் பொது விவாதத்தில் வைக்கப்பட வேண்டும், குழந்தை பிறந்த உடன் அதிகப்படியான விபரம் பெற எந்த மாதிரியான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியவைகள், குழந்தைகள் மீதான கவனம் மற்றும் சிறப்பு கவனம் என்பது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

குழந்தையை இழந்து நிற்கும் நான் மற்றும் என் மனைவி எத்தனை மனரீதி மற்றும் உடல் ரீதியாக அனுபவிக்கும் துன்பத்தின் பிரதிபலிப்பே இந்த பதிவு. நான் எவ்வித ஆய்வும் செய்யவில்லை, ஆனால் விரைவில் SIDS பற்றிய அதிகஅளவு தகவல்கள் மற்றும் பெற்றோர்களுக்கு / மருத்துவர்களுக்கு பயனளிக்கும் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்.

குழந்தைகளின் இதயத்துடிப்பு, சுவாசம், உடல் வெப்பம், மற்றும் இன்னபிற விபரங்களை  கண்காணிக்கும் கருவிகள் தனிநபர் பயன்பாட்டுக்கு கிடைக்கிறதா? கிடைக்கிறது எனில் நண்பர்கள் விபரம் பகிரவும்.

தற்போது இணையத்தில் அதிகம் பயனுள்ள தகவல்கள் இந்த தளத்தில் கிடைக்கிறது:

http://www.sidsresources.org/

http://sids-network.org

http://www.babycenter.in/a419/cot-death-sids

https://en.wikipedia.org/wiki/Sudden_infant_death_syndrome

https://www.nichd.nih.gov/sts/campaign/science/Pages/backsleeping.aspx

Advertisements