Tags

, , , , , ,

எப்போதும் இரவு உணவுக்கு பின் மெஸ்ஸிலேயே சிறிது நேரம் அரட்டை அடித்து பின் ரூமுக்கு போவது வழக்கம் அன்று ஏனோ சங்கத்தை கூட்டாமலேயே கிளம்பிவிட்டேன். இரவு நேரம் என்பதால் மிதமான வேகத்திலேயே எனது பைக்கை முறுக்கினேன்.ஏதோதோ சிந்தனைகள் மனதில் தோன்றிய வண்ணம் இருந்தது. அவினாசி ரோட்டில் பெரியார் காலனி முன்பாக கும்மிருட்டில் ஏதோ ஒரு உருவம் ரோட்டின்  மத்தியில் இருந்த டிவைடரின் ஓரத்தில்  இருந்து சாலையை குறுக்காக கடக்க முயல்வது தெரிந்தது. எனது பைக்கின் ஹாரனை நன்று அழுத்தி அந்த பிரஹஸ்பதியை எச்சரிக்கை செய்ய முயன்றேன்..

விதி வலியது,  நடுத்தர வயது கொண்ட அவரோ எனது ஹாரன் சப்தத்தினை பொருட்படுத்தாமல் ஏதோ காசி யாத்திரைக்கு செல்பவர் போல எதையும் பொருட்படுத்தாமல் கடக்க முன்னேறினார். எனது வாகனத்தின் வேகத்தினை குறைத்தாலும், கையை நீட்டிகொண்டே வந்த பெரியவரின் கையின் மேல் பட்டு நிதானம் இழந்து ஸ்கிட் ஆயிற்று. வண்டியின் வேகத்துடனேயே நானும் பயணித்து கை மற்றும் கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நான் மூன்று பல்டி அடித்து கையை ஊன்றி எழ முயற்சித்தேன், எனது கால்களின் பலவீனத்தை உணர்ந்து மெதுவாக ரோட்டின் ஓரத்தினை அடைந்தேன்.

அந்த சில நொடிகள் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்ட தருணங்களில் பின்னால் ஏதேனும் ஒரு வாகனம் வந்திருந்தால் ஒரு மோசமான விபத்தினை நான் சந்தித்திருக்ககூடும். நல்ல வேலையாக பின்னால் வந்தவர்கள் எனது பைக்கினை மற்றும் என்னை கைத்தாங்கலாக ஓரத்தில் இருத்தி தண்ணீர் மற்றும் முதலுதவிக்கான செயல்களில் ஈடுபட்டார்கள்.

ஒருவர்தண்ணீர் கொடுத்தார், இன்னொருவர் கை மற்றும் கால்களை சோதித்து எனக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வண்ணம் சில வார்த்தைகளை பேசினார். ஒருவர் “ஏன்தம்பி நிதானம் இல்லாமல் விழுந்துட்டியா” என கேட்டு என் சுவாசத்தின் மூலம் நான் போதையில் இல்லை என்பதை தெளிவு செய்து கொண்டார்.

ஒரு வயதான மூதாட்டி என் அருகே வந்து நான் எனது ஹெல்மெட்டை கழற்றிய பின் “தம்பி நீ என்னை பல தடவை லிப்ட் கொடுத்து என்னை எங்க ஏரியாவில் இறக்கி விட்டுருக்க உனக்கு போய் இப்படி ஆயிடுச்சே” என வருத்தப்பட்டு கூறினார்.

நான் மனதளவில் என்னை இடித்து விட்டு மாயமாய் மறைந்து போன மனிதரை மனதில் சபித்தபடி எனது நண்பர்களுக்கு போன் போட்டு வர சொன்னேன்.

நமது மனம் மற்றும் மூளை விசித்திரமானது, அது வரையில் எந்த வித பதட்டம் இல்லாது இருந்த நான் வலது புருவம் அருகே “ஜில்” என உணர கை வைத்து பார்த்தால் “இரத்தம்” ஆங்கிலத்தில் “கோல்ட் ப்ளட் (Cold Blood)”  என்று கூறுவார்கள் அதன் அர்த்தம் வேறாக இருக்கலாம், வெறும் வாக்கியத்தில் படித்த எனக்கு அன்று நிஜமாகவே “ஜில்லிட்டது”. அந்த இரத்தத்தை பார்த்த உடன் தான் ஏதோ வயிற்றில் கரைவது  போன்ற உணர்வு, தரை நழுவுவது  போன்ற உணர்வு, மூச்சு விடக்கூட கடினமான உணர்வு என பலவாறான உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாத அனுபவத்தை அடைந்தேன். மனம் மற்றும் அதன் செயல்பாடுகள் – எங்கிருந்து மூளைக்கு இரத்தத்தின் “பீதி”  கட்டளைகள் பெறப்பட்டன? மூளையும் நமது உணர்வும் ஒன்றா? வேறு வேறா? நமது மனம் மற்றும் மனத்திண்ணம் எவ்வாறானது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தேன்.

ஒருவாராக பாலாஜி மற்றும் கேசவன் அவர்களது பைக்கில் வந்து என்னை அருகாமையில் இருந்த ஒரு அவசர சிகிச்சை பிரிவினில் சேர்த்தனர், அங்கிருந்த டாக்டர்ஸ் செய்ய வேண்டியவற்றை செய்து காலில் ஏற்பட்டிருந்த சிறு “Crack” கிற்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கட்டு போட்டு பத்து நாட்கள் ரெஸ்டில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

யாரோ பொறுப்பில்லாமல் ரோடை கிராஸ் செய்ததன் விளைவு என்னை போன்ற சாமானியனின் இரு வார வேலை, மற்றும் தொழில் இலாபம் பாதிப்பு.

தலை கவசம் அணிந்துஇருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, இல்லையெனில் …..

விபத்திற்கு காரணம் என நான் கருதும் அந்த மனிதரை அன்று நான் மனதில் திட்டினாலும், நான் ஓய்வின் போது, அவரின் மேல் எனக்கு பச்சாதாபம் தான் ஏற்பட்டது. காலில் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களினால் உண்டான வலியினை உணரும் போது, அந்த நாற்பந்தைந்து வயது மனிதரின் வலியினையும் வேதனையும் உணர முடிந்தது. விதி வலியது, அவருக்குமே!

கற்றுக்கொண்டது:
1. முப்பத்துஐந்துக்கு கிமீ வேகத்துக்கு மேல் வேகமாக செல்லக்கூடாது (இது நடக்கக்கூடிய காரியமா என சிந்திக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று இருக்கிறேன்)

2. இனிமேல் யாரேனும் நூறு அடி தள்ளி ரோடு கிராஸ் செய்தால் கூட வண்டியை ஆப் செய்து விட்டு ராம நாமம் ஜபம் செய்ய உத்தேசம்.

3. ஹெல்மெட் இல்லாமல் வண்டியின் சைட் ஸ்டாண்ட் எடுக்கக்கூட உத்தேசம் இல்லை

4. என்னை அன்று மோதிய புண்ணியவானை கண்டுபிடித்து அவரிடம் இருந்து “எஸ்கேப்” ஆவது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். நாளை நான் யார் மேலாவது மோதினால் தொழில் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?

நல்லது என்னவென்றால் இரு வார விடுப்பில் நிறைய பேரின் பிளாக் படிக்க முடிந்தது. ஜவர்லால் சாரின் உருப்படு புத்தகம் படிக்க முடிந்தது. நல்ல புத்தகங்களை சேகரிக்க முடிந்தது.

சொக்கன் சாரின் பதிவினை படித்து அதில் பின்னோட்டம் இட்டு இந்த பதிவினையும் போட்டு விட்டேன்.